புத்ராஜெயா,நவம்பர் 18 — எத்தியோப்பியாவுக்கான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இந்த வரலாற்று முக்கியமான விஜயம், மலேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என மலேசியாவின் எத்தியோப்பியா இடைக்கால தூதர் அஃபாண்டி அபூ பக்கர் தெரிவித்தார்.
பிரதமர் அன்வார் இன்று தொடங்கி நவம்பர் 20 வரை அடிஸ் அபாபாவில் அதிகாரப்பூர்வ பயணத்தில் இருப்பார். ஆப்பிரிக்க கண்டத்திற்கு மலேசியப் பிரதமர் செல்கின்றது இதுவே முதல் முறை என்பதால், இந்த விஜயம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
அவருடன் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸப்ருல் அஜீஸ், கூட்டாட்சி பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா மற்றும் உயர்நிலை அரசு அதிகாரிகள் இணைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபரில் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மது அலி மலேசியாவிற்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ வருகையின் தொடர்ச்சியாக இந்த பயணம் ஏற்பாடுசெய்யப்பட்டதாக அஃபாண்டி கூறினார்.




