ஷா ஆலம், 18 நவம்பர் — கடந்த ஆண்டு சிறைவாசிகளின் மேலாண்மைக்காக அரசு சுமார் 500 மில்லியன் ரிங்கிட் செலவிட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் தெரிவித்தார்.
மலேசிய சிறைத் துறை பதிவுகளின்படி 2024ஆம் ஆண்டில் 490.2 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாலும், இந்த ஆண்டில் செப்டம்பர் 26ஆம் தேதி வரை 433.6 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்தச் செலவில் மேலாண்மை, மின்சாரம், நீர், அடிப்படை தேவைகள், உணவு, சுகாதார சேவைகள், நீதிமன்றம் மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, மறுவாழ்வு மற்றும் சமுதாய இணைப்பு போன்ற திட்டங்கள் அடங்கும் என்று அவர் நாடாளுமன்ற இணையவழி பதிலில் தெரிவித்தார்.
இந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி வரை 278,272 சிறைவாசிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்; இதில் 199,463 பேர் நாட்டினர், 78,809 பேர் வெளிநாட்டினர் ஆவர். அதிகமான சிறைவாசிகள் 31 முதல் 40 வயதுக்குள் உள்ளவர்கள். மேலும் சிறைத் துறை சிறைவாசிகளின் நலன், சுகாதாரம் மற்றும் மேலாண்மையை திறம்பட மேற்கொள்ள உறுதியாக செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
“வெறும் அடிப்படை தேவைகளை வழங்குவது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல; மறுவாழ்வு வலுப்படுத்தல், நற்பண்பு மேம்பாடு, மன நலம் மற்றும் சமுதாயத்தில் மீண்டும் ஒன்றதாக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதும் முக்கியம். இந்த முழுமையான அணுகுமுறை மூலம், சிறைவாசிகள் சமூகத்துக்கு திரும்பும் போது அதிகத் தயாரிப்புடனும், பயனுள்ளவர்களாகவும், பொறுப்புடன் நடக்கக்கூடியவர்களாகவும் மாறுவர். இது நாட்டின் பாதுகாப்பும் நலனும் உயர்வதற்கு உதவும்,” என்று அவர் எடுத்துக்காட்டினார்.




