போர்ட் கிள்ளான், நவம்பர் 18 — வெளிநாட்டு நபர்கள் பயன்படுத்தியிருந்த போதைப்பொருள் புகைபிடிக்கும் இடத்தை ஒரு குடியிருப்பு வீட்டில் நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடித்தனர்.
ஒன்பதாவது மாடியில் சோதனை செய்தபோது, ஒரு வெளிநாட்டு ஆண் ஒருவர் சிறு பையை மறைக்க முயன்றது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது என்று குடிவரவு துறை துணைத் தலைமை இயக்குநர் தத்துக் லோக்மான் எஃபெண்டி ரம்ளி கூறினார்.
மேலும் சோதனை செய்தபோது, அந்தப் பையில் போதைப்பொருள் புகைபிடிக்க பயன்படும் மாற்றியமைக்கப்பட்ட சாதனங்கள் இருப்பது தெரியவந்தது. “அந்த வீடு மூன்று வெளிநாட்டு நபர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும் இந்த வழக்கு மேல் விசாரணைக்காக காவல்துறைக்கு ஒப்படைக்கப்படும் என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் இரவு 8.30 மணிக்கு தொடங்கி சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் 78 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். மொத்தம் 285 வெளிநாட்டு நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு, 95 பேர் பல்வேறு குடிவரவு குற்றச்சாட்டுகளுக்காக, குறிப்பாக காலாவதி தங்குதல் மற்றும் செல்லுபடியாகும் அடையாள ஆவணங்கள் இல்லாமை காரணமாக கைது செய்யப்பட்டனர்.
18 முதல் 50 வயதுக்குட்பட்ட, 70 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் ஆகிய அனைவரும் செமினி குடிவரவு காவல் மையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளனர்.




