கோலாலம்பூர், நவ 18 - மலேசியாவில் குடியிருப்புச் சொத்துக்களை வாங்கும் வெளிநாட்டவர்களில் சீனாவைச் சேர்ந்தவர்களே முதலிடம் வகிக்கின்றனர் என புதியச் சந்தை தரவுகள் காட்டுகின்றன.
இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும், சீன நாட்டவர்களை உட்படுத்தி 834.64 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 329 பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
அதனை அடுத்து சிங்கப்பூர் நாட்டவர்கள் 320 பரிவர்த்தனைகளில் 518.27 மில்லியன் ரிங்கிட்டுக்கு குடியிருப்புகளை வாங்கியுள்ளனர். 47 பரிவர்த்தனைகளை உட்படுத்திய 87.16 மில்லியன் ரிங்கிட்டுடன் இந்திய நாட்டு பிரஜைகள் மூன்றாமிடத்தில் உள்ளானர்.
இந்த பரிவர்த்தனைகள் வட்டார நாடுகள் மலேசியாவின் சொத்துச் சந்தையில் வலுவான ஆர்வத்தைக் கொண்டுள்ளதைக் குறிப்பதாக, வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
அதே நேரத்தில் இந்த 6 மாதக் காலக்கட்டத்தில் மலேசியர்கள் 119,394 சொத்துடமைப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
அது 47.47 பில்லியன் ரிங்கிட்டை உட்படுத்தியது எனக் குறிப்பிட்ட அவர், உள்ளூர் சொத்துடைமைச் சந்தையில் இன்னமும் உள்நாட்டவர்களின் கையே ஓங்கியிருப்பதை இது காட்டுவதாகக் கூறினார்.




