ஷா ஆலாம், நவ 17- சிலாங்கூர் கால்பந்து சங்கம் தனது காற்பந்து அணி மீது விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரி மலேசிய கால்பந்து சங்கத்திடம் முறையீடு செய்யவுள்ளது.
இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை செயல்முறை தேவை என்பதை சிலாங்கூர் FC வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இன்று மாநில நிர்வாகக் கட்டிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிலாங்கூர் இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹாலிமி, SFC நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா நகர மண்டப மைதானத்தில் நடந்த நெகிரி செம்பிலானுக்கு எதிரான போட்டியின்போது ஏற்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிலாங்கூர் FC-க்கு RM100,000 அபராதம் விதிக்கப்பட்டு, இரண்டு FA கோப்பை ஆட்டங்களில் ரசிகர்கள் இன்றி விளையாட உத்தரவிடப்பட்டது.
இந்தத் தண்டனை கடுமையானதாகவும், வரம்பு மீறியதாகவும் இருப்பதாக தான் கருதுவதாகக் குறிப்பிட்ட நஜ்வான், தவறான குற்றச்சாட்டுகள் இருந்தால், நிர்வாகம் அதனை எதிர்க்க வேண்டும் என்றும், FAM மீண்டும் ஒருமுறை இந்தக் கடும் தண்டனையை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதே சமயம், போட்டிகளைக் காணும் ரசிகர்கள் உணர்ச்சிவசப்படாமல், ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ரசிகர்களின் தவறான நடத்தை கிளப்புக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.




