ஷா ஆலாம், 17 நவம்பர்: சபாக் பெர்ணம் கடற்கரை பகுதி வழியாக நாட்டில் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக நம்பப்படும் ஒன்பது பெண்களை உள்ளடக்கிய 30 வெளிநாட்டு நபர்கள் நேற்று நள்ளிரவு நடைபெற்ற நடவடிக்கையில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று இரவு 12.15 மணியளவில் காவல் பணியில் இருந்த போலீஸ் உறுப்பினர்கள் பதிவு எண் இல்லாத ஒரு மரப்படகு சந்தேகத்துக்கிடமாக கடல் பகுதியில் நகர்வதை கண்டறிந்தனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமை அதிகாரி டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.
“அந்தப் படகு சுங்கை புலாய் கடற்கரைக்கு அருகில் தடுத்து நிறுத்தப்பட்டது. விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம், 21 முதல் 49 வயதிற்குள் உள்ள ஒன்பது பெண்கள் உட்பட 30 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன், மனித கடத்தல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டு கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப் பட்டன, என்று அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு மனிதக் கடத்தல் மற்றும் குடியேற்றத் தடுப்பு சட்டத்தின் கீழும், குடியேற்றச் சட்டத்தின் கீழும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிலாங்கூர் போலீஸ் கடல் எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்தி, சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.




