புத்ராஜெயா, 17 நவம்பர்: நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் குரங்கம்மை புதிய mpox தொற்று குழு உருவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நோய் முதலில் மேற்கு ஆப்பிரிக்கா பகுதிக்கு பயணம் செய்திருந்த வெளிநாட்டு ஆடவருக்கு ஏற்பட்டுள்ளது..
அந்த நபர் 20 அக்டோபர் அன்று நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டு, 12 நவம்பர் அன்று mpox தொற்று என்று உறுதி செய்யப் பட்டார் என சுகாதர அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது. இந்த முதற்கட்ட நோயாளி கண்டறியப் பட்டதைத் தொடர்ந்து, அதே வீட்டில் வசித்த மூன்று குடும்ப உறுப்பினர்கள் அக்டோபர் 30 முதல் அறிகுறிகள் காணப்பட்டு, நவம்பர் 13 அன்று mpox தொற்று உறுதி செய்யப்பட்டனர்.
“அனைத்து நோயாளிகளும் தற்போது சீரான உடல்நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளனர். மேலும் அவர்களுடன் நெருக்கமாக இருந்த ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வரை செய்யப்பட்ட ஆய்வுகளில், இந்த தொற்று குடும்பத்தினருக்குள் மட்டுமே பரவியுள்ளது; நிலைமையும் கட்டுப்பாட்டில் உள்ளது,” என்று அறிவிப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் 46 வது தொற்றியல் வாரம் வரை, மொத்தம் 12 mpox நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. 2023 ஜூலை மாதம் முதல் மலேசியாவில் பதிவாகிய மொத்த எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதில் 22 பேர் mpox வகை II தொற்றும், ஒருவர் மட்டும் வகை I b தொற்றும் பெற்றுள்ளனர்.
மேலும் “mpox இன்னும் பரவக்கூடிய நிலை தொடர்ந்துள்ளதால், குறிப்பாக ஆபத்தான நடத்தைகளில் ஈடுபட்டவர்களிடையே அதிகம் காணப்படுவதால், மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அறிகுறிகள் கொண்டவர்களைத் தொடுதல் அல்லது நெருங்கிய தொடர்பு கொள்ளுதல் தவிர்க்கப்பட வேண்டும்.
mpox என்பது குரங்கு அம்மை வைரஸ் காரணமாக ஏற்படும் ஒரு தொற்றுநோய். இந்நோயின் அறிகுறிகளில் காய்ச்சல், முகத்தில், கைகளில், கால்களில், பிறப்புறுப்புகளில், கண்களின் வெளிப்புற மற்றும் உள்ளமைப்புகளில் நீர்ப்புண்கள் தோன்றுதல் உண்டு.புதிய mpox தொற்று குழு உருவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.




