ஷா ஆலம், நவ 17: ஶ்ரீ செத்தியா தொகுதி அளவில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விழா பூங்கா கேர்தாஸ் மண்டபத்தில் 500க்கும் மேற்பட்ட பல இனப் பொதுமக்களின் பங்கேற்புடன் கொண்டாடப்பட்டது. இது அத்தொகுதியில் நிலவும் ஒற்றுமையையும் இணக்கத்தையும் வெளிப்படுத்தியது.
இந்த விழா சிலாங்கூரின் பல்வகை கலாச்சாரங்களை மரியாதையுடன் கொண்டாடும் பன்முகத்தன்மையின் வலிமையை பிரதிபலிக்கிறது என ஶ்ரீ செத்தியா மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முகமட் ஃபாஹ்மி ஙா தெரிவித்தார்.
“இந்நிகழ்வில் மலாய், சீனர், இந்தியர் என அனைத்து சமூக மக்களும் ஒன்றாகக் கலந்து கொண்டதைப் பார்த்தோம். இதுவே நாம் விரும்பும் ஒற்றுமை உணர்வு ஆகும்,” என்று அவர் கூறினார்.
எதிர்வரும் நவம்பர் 22ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, டேசா மெந்தாரியில் நடைபெறும் அடுத்த நிகழ்வில் 1,000க்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியின் ஒற்றுமை நிகழ்ச்சிகளுக்கு இடையறாத ஆதரவு வழங்கும் பொதுமக்கள் அனைவருக்கும் டாக்டர் முகமட் ஃபாஹ்மி நன்றியை தெரிவித்தார்.
“நான் இஸ்லாமிய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்தாலும், இங்குள்ள இந்து சமூகத்தினரால் மிகுந்த அன்புடன் வரவேற்கப்பட்டேன். இதுவே ஒற்றுமையை முன்வைக்கும் அரசாங்கமாகிய எங்களின் வலிமை என்றார்.
உணவு விருந்து மட்டுமல்லாமல், கலாச்சார நிகழ்ச்சிகளும், அதிர்ஷ்டக் குலுக்கும் விழாவை மேலும் சிறப்படை செய்தன.




