கேப்பெங், நவ.16: பேராக் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் முதல் முறையாக முருகப்பெருமான் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாடு இங்குள்ள கம்போங் காபாயங் முருகன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் மட்டுமன்றி தமிழக முருக பக்தர்கள் இம்மாநாட்டில் கலந்துக் கொண்டனர் என்று இம்மாநாட்டை தொடக்கி வைத்த போது பேராக் மாநில இந்திய சமூக நலத்துறை, சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் மகிழ்ச்சியுடன் கூறினார்.
அடுத்த ஆண்டு இம்மாநாடு தேசிய அளவில் நடைபெற ஏற்பாடு செய்யப்படும். இவ்வாண்டு இந்த மாநாட்டின் முழு செலவினை பேராக் அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. அடுத்தாண்டும் பேரா மாநில அரசாங்கத்தின் தலைமையில் இம்மாநாடு நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.
அரசியல் மற்றும் சாதி போன்ற வேற்றுமை-களை ஓரங்கட்டிவிட்டு நமது இந்து சமூகத்தின் நன்மையை கருதி ஆன்மீகத்திற்கு முன்னுரிமையும், முக்கியதுவமும் வழங்குவோம் என்று அவர் கருத்துரைத்தார்.இந்த முருகன் மாநாட்டில் அதிகமான இந்திய இளைஞர்கள் கலந்துக் கொண்டனர். முருக பெருமான் தம் சக்தியால் அதிகமான இந்திய இளைஞர்களை கவர்ந்திழுத்துள்ளார்.
இவ்வாண்டு, உப்சி பல்கலைக்கழகம், ஈப்போ ஆசிரியர் பயிற்சி கழக மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். அடுத்தாண்டு இந்நாட்டிலுள்ள 29 பல்கலைக்கழக மாணவர்களுக்கு அழைப்பு வழங்கப்படும். அத்துடன் இலவச பேருந்து வசதியும் அவர்களுக்கு செய்து தரப்படும் என்று அவர் சொன்னார்.
இந்த முதல் முருகன் மாநாடு ஏற்பாட்டிற்கு உதவிய பேராக் இந்து சங்க பேரவை, பேராக் இந்து தர்ம மாமன்றம், ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா, கம்போங் காபாயங் முருகன் ஆலய நிர்வாகம், பேராக் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், ஆசிரியர் கழகம் மற்ற இதர இயக்கங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார் டத்தோ அ.சிவநேசன்.


