புத்ராஜெயா, 15 நவம்பர் — நாட்டின் சிறை நிர்வகிப்பில் விரிவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த உள்துறை அமைச்சு தற்போது வேலை செய்து வருவதாக அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். இந்த மாற்றங்களின் மூலம் கைதிகளின் நலனும் பாதுகாப்பும் மேம்படுத்தப்படும் என அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பழைய சிறைச்சாலைகளின் வசதிகளை மேம்படுத்துவதோடு வயது முதிர்ந்த கைதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். தற்போது சுமார் 4,000 பேர் உடல் குறைபாடு உள்ளவர்கள் அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவிக்கும் மூத்த குடிமக்கள் சிறையில் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
“எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகள் மற்றும் அவர்களுக்கு பொருத்தமான கழிப்பறைகள் போன்ற தேவைகளை நாங்கள் பார்க்க வேண்டும். மடாணி மதிப்புகளை நான் செயல்படுத்த விரும்புகிறேன்; அவர்கள் மீது இரக்கமாக இருப்பது முக்கியம். எண்ணிக்கை அதிகமில்லாவிட்டாலும், இந்த விவகாரத்தை கவனிப்பது எனக்கு ஒரு மிகப் பெரிய பொறுப்பாகும்,” என்று டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் கூறினார்.
மேலும், கிளந்தானில் உள்ள பெங்காலான் செப்பா சிறைச்சாலை மற்றும் கெடாவில் உள்ள அலோர் ஸ்டார் சிறைச்சாலை போன்ற காலம் கடந்த, பாழடைந்த சிறைச்சாலைகளை மாற்றுவதற்கான வாய்ப்புகளையும் அமைச்சு தற்போது ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.




