ஷா ஆலாம், 15 நவம்பர்: சிலாங்கூர் மாநில அரசு, 2026 ஆம் ஆண்டில் RM103.2 மில்லியன் ஒதுக்கீட்டுடன் 300 புதிய வீட்டுகளை ஸ்மார்ட் சேவா திட்டத்தின் கீழ் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை வாடகைக் காலத்தை வழங்குவதுடன், வாடகையாளர்கள் செலுத்திய மொத்த வாடகையின் 30 சதவீதத்தை ஊக்கத்தொகையாக திருப்பி வழங்கும் வசதியையும் உடையதாகும் என மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் சாரி கூறினார்.
“இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள், சொந்த வீடு இல்லாதவர்கள் அல்லது வீட்டு கடன் பெறுவதில் சிரமம் அனுபவிப்பவர்களுக்கு, சராசரி மக்களுக்கு ஏற்ற குறைந்த விலை வாடகை வீட்டு வசதியை வழங்குவதே,” என்று அவர் கூறினார்.
அவர் நேற்று நடைபெற்ற 2026 சிலாங்கூர் பட்ஜெட் தாக்கலின் போது இதை தெரிவித்தார். ஸ்மார்ட் சேவா திட்டம், சிலாங்கூர் மக்களுக்கான குறைந்த விலை வீடமைப்பு முயற்சியை வலுப்படுத்துவதில் மாநில அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றாகும்.




