கோலாலம்பூர், 14 நவம்பர்: சிலாங்கூர் குடிநுழைவுத் துறை, அதிகாரிகள் போல நடித்து முதலாளிகளை ஏமாற்றி, ரெய்ட்களில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை விடுவிக்கலாம் என்று கூறி மோசடி செய்யும் புதிய யுக்தியைக் கண்டுபிடித்துள்ளது.
சிலாங்கூர் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் கைர்ருல் அமினுஸ் கமாருத்தீன் கூறியதாவது, ‘மத்தியஸ்தர்’ போலச் செயல்படும் இந்தச் சிண்டிகேட், ஒவ்வொரு அமலாக்க நடவடிக்கையையும் பயன்படுத்திக் கவனக்குறைவான முதலாளிகளை இலக்காக கொண்டுள்ளது என அவர் கூறினார்:
“நாங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு ஆபரேஷன் நடத்தினால், தங்களை சிலாங்கூர் குடிநுழைவு அதிகாரிகள் என்று கூறி முதலாளிகளுக்கு அழைப்புகள் விடுக்கும் மோசடிக் குழுவினர் செயல்பாடு இருந்துள்ளது
“கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுவித்துத் தருவதாகக் கூறி Touch ‘n Go அல்லது பணமாகக் கட்டணம் கோருகின்றனர்,” என்று அவர் பெட்டாலிங் ஜெயா, பெலாங்கி டமான்சாராவில் நேற்று இரவு நடத்திய ஆபரேஷன் முடிந்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முதலாளிகள் ஒவ்வொரு தொழிலாளருக்கும் RM5,000 முதல் RM10,000 வரை பணம் செலுத்தி விடுவிக்கலாம் என்று நம்புகின்றனர். ஆனால் பின்னர் ஷா அலாமில் உள்ள குடிவரவு அலுவலகத்துக்குச் சென்றபோது, பணம் பெற்ற தொலைபேசி எண் செயலிழந்து விட்டது என்பதை அறிகிறார்கள்.
கைருல் அமினுஸ் கூறியதில், இந்த மோசடி நடவடிக்கை கடந்த மாதம் முதல் செயல்பட்டு வருவதுடன், சில முதலாளிகளுக்கு மொத்தம் RM 57,000 இழப்பை ஏற்படுத்தியது.
சிண்டிகேட், உண்மையான குடிவரவு அதிகாரிகள் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி முதலாளிகளை நம்ப வைக்க முயன்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களை விடுவிப்பதற்காக மூன்றாம் தரப்பினருடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று முதலாளிகளுக்கு அறிவுறுத்துவதக அவர் மேலும் கூறினார்:
ஒரு வெளிநாட்டு தொழிலாளர் கைது செய்யப்பட்டால், முதலாளிகள் மூல ஆவணங்களை சரிபார்ப்பிற்காக கொண்டு வர வேண்டும்; அடுத்தபடி சட்ட நடைமுறைகளின் கீழ் விடுவிப்பு செயல்முறை நடைபெறும்.
“பலருக்கும் செல்லுபடியாகும் ஆவணங்கள் உள்ளன, ஆனால் பாஸ்போர்ட் பொதுவாக முதலாளிகள் வைத்திருப்பார்கள். எனவே, முதலாளி மூலப் பாஸ்போர்ட்டை கொண்டு வர வேண்டும்; பின்னர் சரியான நடைமுறையின்படி தொழிலாளர்களை விடுவிப்போம்,” என்று அவர் கூறினார்.




