கோலாலம்பூர், நவம்பர் 13 - ஆர்வலர் அம்ரி சே மாட் மற்றும் போதகர் ரேமண்ட் கோ காணாமல் போனது குறித்து மறு விசாரணை வெளிப்படையாகவும், நீதி முழுமையாக நிலைநிறுத்தப் படுவதை உறுதி செய்வதற்காக எந்த தலையீடும் இல்லாமல் நடத்தப்படும்.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில் , எந்த ஒரு தரப்பினரையும் அரசாங்கம் பாதுகாக்காது என்றும், வழக்குகளை மீண்டும் விசாரிக்க நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்றும் கூறினார். இந்த அரசு சட்டத்தின் ஆட்சியை மதிக்கிறது, உண்மையை வெளிக்கொணரவும் நீதியை வழங்கவும் உறுதிபூண்டுள்ளது.
முந்தைய விசாரணைகள் முறைப்படி மூடப் படவில்லை என்றாலும், ராயல் மலேசியா காவல்துறை (பி.டி.ஆர்.எம்) உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்த முறை, குழுவிற்கு ஒரு ஏ.சி.பி (உதவி ஆணையர்) தலைமை தாங்குவார். "அவர்கள் அனைத்து ஆரம்ப விசாரணை ஆவணங்கள், மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (சுஹாகம்) அறிக்கைகள் மற்றும் சிறப்பு பணிக்குழு அறிக்கைகளை மதிப்பாய்வு செய்வார்கள், அத்துடன் புதிய ஆதாரங்களையும் சேகரிப்பார்கள்.
இந்த வழக்குகள் தொடர்பான தகவல்கள் உள்ள எவரும் முன்வந்து காவல்துறையின் விசாரணைக்கு உதவுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் "என்று அவர் இன்று டேவான் ராக்யாட்டில் கூறினார்.
அம்ரி மற்றும் கோ மீதான நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் அரசாங்கத்தின் அடுத்தடுத்து நடவடிக்கைகள் குறித்து சையது இப்ராஹிம் சையட் நோஹ் (ஹராப்பான்-லேடாங்) கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார். நீதிமன்றத்தின் உத்தரவின் படி, ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அட்டர்னி ஜெனரலின் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப் பட்டதாக உள்துறை அமைச்சர் கூறினார்.
"நிதி கடமைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உட்பட மேல்முறையீடு செய்ய காரணங்கள் உள்ளன என்று அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளார். அரசாங்கம், வாழ்க்கையின் மதிப்பை அல்லது சுதந்திரத்திற்கான உரிமையை குறைத்து மதிப்பிடுகிறது என்று இது அர்த்தம் படுத்துவதில்லை. உண்மையில், அரசாங்கம் நிதிச் சுமைக்கு முன்னுரிமை அளிக்க வில்லை, மாறாக உலகளாவிய நீதியை நிலைநிறுத்தும் கொள்கையை பின்பற்றுகிறது "என்று அவர் கூறினார்.
சையது இப்ராஹிமின் கூடுதல் கேள்விக்கு பதிலளித்த டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன், 2023 ஆம் ஆண்டில் சிறப்பு பணிக்குழு அறிக்கையைப் பெற வேண்டும் என்ற அம்ரியின் மனைவியின் கோரிக்கையை மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற அரசாங்கத்தின் முடிவு, இந்த வழக்கில் அரசாங்கம் யாரையும் பாதுகாக்கவில்லை என்பதற்கான சான்றாகும் என்று வலியுறுத்தினார்.
"உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழங்க விரும்பினால், அந்த நேரத்தில் மேல்முறையீடு செய்யுமாறு அட்டர்னி ஜெனரலுக்கு நாங்கள் அறிவுறுத்தி இருக்கலாம், ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை, ஏனென்றால் அம்ரியின் மனைவிக்கு அந்த அறிக்கையை பெற உரிமை உண்டு என்று நாங்கள் நம்பினோம். இது நீதிக்கான எங்கள் உறுதிப் பாட்டைக் காட்டுகிறது "என்று அவர் கூறினார்.
"பாஸ்டர் கோவைப் பொறுத்தவரை, அவரது குடும்பம், அவர் வலுக்கட்டாயமாக காணாமல் போனதன் அடிப்படையை நம்பி உள்ளது, இது சுஹாகாம் அறிக்கையில் பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் அம்ரியின் மனைவி தனது நடவடிக்கையை தொடங்கும் போது அந்த அடிப்படையைப் பயன்படுத்த வில்லை, அதனால் தான் தொகைகள் வேறுபடுகின்றன" என்று சைபுடின் நசாத்தியோன் கூறினார்.




