ஷா ஆலாம், நவம்பர் 13: ஜொகூர் மாநிலத்தில் பணிபுரியும் 1,40,185 கூட்டரசுப் பணியாளர்கள் தலா RM500 என்ற சிறப்பு ஊக்கத்தொகையைப் பெறவுள்ளனர். அதே சமயம், மாநில அரசுப் பணியாளர்களுக்கு இரண்டு மாத ஊதியத்துக்கு இணையான ஊக்கத்தொகையும் டிசம்பரில் வழங்கப்படும்.
ஜொகூரில் பணிபுரியும் கூட்டரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இத்தொகை வரலாற்றில் முதல்முறையாக வழங்கப்படுவதோடு, இதற்காக மொத்தம் RM70.1 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மாநில மந்திரி புசார் ஒன் ஹபீஸ் காசி தெரிவித்தார்.
“நாட்டின் ஒற்றுமை மனப்பான்மையை பிரதிபலிக்கும் வகையில், ஜொகூர் மாநில அரசு கூட்டரசுப் பணியாளர்களின் பங்களிப்பை பாராட்டும் நோக்கில் தலா RM500 என்ற சிறப்பு ஊக்கத்தொகையை வழங்குகிறது. இது மாநில அரசு கூட்டரசுப் பணியாளர்களுக்கு வழங்கும் முதல் ஊக்கத்தொகை ஆகும்,” என்று அவர் இன்று கோத்தா இஸ்கண்டாரில் நடைபெற்ற ஜொகூர் 2026 பட்ஜெட் உரையின்போது தெரிவித்ததாக BuletinTV3 செய்தி தெரிவித்துள்ளது.
மேலும், மாநில அரசுப் பணியாளர்களுக்காக இரண்டு மாத ஊதியத்துக்கு இணையான சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார். “நான் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன், இரண்டு மாத ஊதியத்துக்கு இணையான சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் 17,454 மாநில அரசுப் பணியாளர்கள் பலன் பெறுவார்கள்,” என்று அவர் கூறினார்.
மேலும் இவ்வூக்கத்தொகை அனைத்து அரசுப் பணியாளர்களும் நேர்மையுடன் மற்றும் முழு அர்ப்பணிப்புடன் மக்களின் நலனுக்காக தொடர்ந்து சேவை செய்யும் ஊக்கமாக அமையும் என்றார்.




