கோலாலம்பூர், நவ 13- சபா மாநிலத்திற்கு 40 விழுக்காடு சிறப்பு மானியம் வழங்கப்பட வேண்டும் என்று கோத்தா கினாபாலு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக கூட்டரசு அரசாங்கம் மேல்முறையீடு செய்யவில்லை.
இதற்கு காரணம், சபா மாநில உரிமையைப் புத்ராஜெயா மதிப்பதாகவும் இதனையே கூட்டரசு அரசியலமைப்பு சட்டமும் வலியுறுத்துவதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்தார்.
நீதிமன்ற தீர்ப்பினை ஆழமாக பரிசீலனைச் செய்த பிறகு கூட்டரசு அரசாங்கம் இந்த மேல்முறையீடு நடவடிக்கையை மேற்கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்த நிலையில் இது அரசியல் அழுத்தம் காரணமாக என்று சொல்லப்படும் கூற்றைப் பிரதமர் அன்வார் முற்றிலுமாக நிராகரித்தார்.
இந்த சிறப்பு மானியம் தொடர்பாக கூட்டரசு அரசாங்கம் உடனடியாக சபா மாநில அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சபா மாநிலத்தின் 40 விழுக்காடு சிறப்பு மானியம் குறித்து விளக்கமளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக, கூட்டரசு அரசாங்கம் சபா மாநில உரிமைகளைப் புறக்கணித்ததாக கடந்த அக்டோபர் 17ஆம் தேதி கோத்தா கினாபாலு உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில் சபாவுக்கான 40 விழுக்காடு சிறப்பு மானியம் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.




