ஷா ஆலம், நவம்பர் 13: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 55 மலேசியர்கள் ஜனவரி முதல் செப்டம்பர் வரை வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 50 பேர் ஆண்கள், ஐந்து பேர் பெண்கள் என புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் தெரிவித்தார். இவர்கள் 19 நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் அதிகமானோர் இந்தோனேசியா, சிங்கப்பூர், கம்போடியா, தைவான் மற்றும் தாய்லாந்து எனப் பதிவாகியுள்ளது.
“அரச மலேசிய போலீஸ் பொதுமக்களை சிக்கவைக்கும் இத்தகைய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை மிகக் கடுமையாக எடுத்துக்கொள்கிறது. தற்போது சிண்டிகேட்டுகள் சமூக ஊடகங்கள், போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மற்றும் இலவச பயண சலுகைகள் வழியாக சேர்த்துக் கொள்கின்றனர்,” என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
இளம் தலைமுறையினர், வேலை தேடுபவர்கள், மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் சிண்டிகேட்டின் முக்கிய குறியாக உள்ளனர். மக்கள் RM1,000 முதல் RM 10,000 வரை கவர்ச்சியான கூலி மற்றும், விமான டிக்கெட், தங்குமிடம் போன்ற எளிய வேலை வாக்குறுதிகளும் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் போதைப்பொருள் உள்ள பைகளை எடுத்துச் செல்லும் பணிக்காக பயன்படுத்தப்படுகிறார்கள். மேலும் சமூக ஊடகம் அல்லது இணைய வேலைவாய்ப்பு தளங்களில் சந்தேகத்திற்கிடமான சலுகைகளால் ஏமாற வேண்டாம் என்று அவர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
போதைப்பொருள் தொடர்பான தவறான நடவடிக்கை அல்லது விற்பனை குறித்த தகவல்கள் உள்ளவர்கள் புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் 012-208 7222 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.




