ஷா ஆலம், நவம்பர் 13: சபாக் பெர்ணம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 14 பள்ளிகளில் 1,500 மாணவர்கள், எஸ்பிஎம் தேர்வுக்கான தயாரிப்பாக சுங்கை ஆயர் தாவார் மாநில சட்டமன்ற தொகுதியிலிருந்து எழுத்து பொருள் உதவியை பெற்றனர்.
இந்த முயற்சி மாணவர்களின் சுமையை குறைப்பதோடு, வரவிருக்கும் முக்கியமான தேர்வை எதிர்கொள்ள உற்சாகமும் ஊக்கமும் அளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது என அத்தொகுதியின் மக்கள் பிரதிநிதி டத்தோ ரிஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
“அனைத்து எஸ்பிஎம் மாணவர்களும் மன அமைதி மற்றும் தன்னம்பிக்கையுடன் ஒவ்வொரு கேள்வியையும் சிறப்பாக எதிர்கொள்ள கடவுள் அருள் புரிவாராக. மேலும் “இன்றைய கடின உழைப்பே நாளைய வெற்றியை தீர்மானிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்,” என அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
இந்த உதவி, குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் நலனில் சுங்கை ஆயர் தாவார் மாநில சட்டமன்றத்தின் அக்கறையையும் பிரதிபலிக்கிறது. 2025 ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் தேர்வு நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும்.




