கோலாலம்பூர், நவம்பர் 13 - கடந்த மாதம் கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தைவான் சமூக ஊடக பிரபலம் ஒருவர் இறந்ததை தொடர்ந்து போலீஸ் காவலில் வைக்கப்பட்ட பின்னர் நாம் வீ என்று அழைக்கப்படும் வீ மெங் சீ, போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப் படுவார்.
அட்டர்னி ஜெனரல் டான் ஸ்ரீ முகமது துசுகி மொக்தார், அக்டோபர் 22 ஆம் தேதி இங்குள்ள ஜாலான் கான்லேவில் உள்ள ஒரு ஹோட்டலின் குளியலறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 33 வயதான சியா யுன் ஹ்சின் மரணம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும், மேலும் விசாரணைக்கான அறிவுறுத்தல்கள் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
"இதுவரை, இறந்தவரின் மரணத்திற்கு நாம் வீ காரணமானவர் என்பதைக் காட்ட எந்த ஆதரமும் இல்லை என்பதால் நாங்கள் போலீஸ் ஜாமீன் வழங்குகிறோம். "என்று அவர் இன்று இங்கு தொடர்பு கொண்டபோது கூறினார்.
இன்று முன்னதாக, கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ், போலீசார் விசாரணையை முடித்து விட்டதாகவும், விசாரணை ஆவணங்களை துணை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைத்ததாகவும் கூறினார்.நாம்வீயின் நீட்டிக்கப்பட்ட மூன்று நாள் காவலில் கால அவகாசம் இன்று முடிவடைகிறது.




