ஜார்ஜ்டவுன், நவ 13- பினாங்கு மாநிலத்தின் மீது கெடா மாநிலம் ஆதாரமற்ற உரிமைக்கோரலை முன்வைத்துள்ள நிலையில் பினாங்கு மாநிலம் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இறையாண்மை கொண்ட மாநிலமாகும் என்று பினாங்கு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் கூறினார்.
கெடா மாநிலத்தின் சமீபத்திய அறிக்கையானது கூட்டரசு அரசியலமைப்பிற்கு முரணாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
1957-இல் மலேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது, கூட்டரசு அரசியலமைப்பு (Federal Constitution) நாட்டின் உச்சச் சட்டமாக நிலைபெற்றதால், கெடாவுக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான 1957-க்கு முந்தைய வரலாற்று குத்தகை ஒப்பந்தங்கள் இன்று செல்லாது என்றும், பினாங்கு ஒரு சமமான இறையாண்மை கொண்ட மாநிலம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வரலாற்று உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு இறையாண்மையைத் திரும்பப் பெற முடியாது என்றும், இந்தக் கூற்று பில்லியன்கள் முதலீடுகளை ஈர்க்கும் மற்றும் LRT போன்ற திட்டங்களுடன் வேகமாக வளர்ந்து வரும் வடக்கு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, கேடா, பினாங்கு மற்றும் பெர்லிஸ் ஆகியவை வடக்கு பொருளாதார மண்டலத்தின் (NCER) கீழ் வளர்ச்சி மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
பினாங்கு அதன் உரிமைகளையும் இறையாண்மையையும் கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், மலேசியா மாடானி-இன் கீழ் செழிப்புடன் நீடிக்கும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.




