கோலாலம்பூர், நவ 13- அரசியலமைப்புச் சட்டமே மேலானது என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல் சட்ட ரீதியிலான கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம்தான் பினாங்கு கெடாவுக்குச் சொந்தமானது என்ற எந்தவொரு வரலாற்று உரிமைக் கோரிக்கையையும் விட மேலானது என அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் இன்று மக்களவையில் திட்டவட்டமாகக் கூறினார்.
பினாங்கு மாநிலத்தின் தன்னாட்சி உரிமையை அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக வழங்குகிறது எனப் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் (PH-Bukit Gelugor) வலியுறுத்தினார்.
பினாங்கு ஒரு தன்னாட்சி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும், பினாங்கு கெடா அரமனையின் சொத்து என்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் வாதத்தை அவர் மறுத்தார்.
இந்த விவாதம், பினாங்கு வரலாற்றை மறுஆய்வு செய்ய வேண்டும் எனச் சிக் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மட் தர்மிசி சுலைமான் (PN-Sik) முன்மொழிந்தபோது தொடங்கியது. 1786 ஆம் ஆண்டு பிரான்சிஸ் லைட் பினாங்கைக் கைப்பற்றியது சட்டவிரோதமானது, ஏனெனில் ஒப்பந்தம் பிரித்தானிய அரசாங்கத்துடன் கையெழுத்திடப்படவில்லை என அஹ்மட் தர்மிசி வாதிட்டார்.
கெடா சுல்தானகத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படாததால், லைட் பினாங்கில் சட்டவிரோதமாகக் குடியேறினார் என்றார். "கெடா தரப்பு, பினாங்கு சுல்தான் அப்துல்லா முக்காரம் ஷா ஆட்சியின் கீழ் கெடா சுல்தானகத்தின் சொத்து என்று கூறுகிறது. அதன் செல்லுபடியாகும் தன்மையைத் தீர்மானிக்க இந்த விவகாரம் மீண்டும் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
அதற்குப் பதிலளித்த ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், அரசியலமைப்பின் 4(1) மற்றும் 4(2) பிரிவுகள் பினாங்கு மலேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒரு மாநிலம் என்று கூறுவதால், அதன் தன்னாட்சி உரிமையை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று வலியுறுத்தினார். "கெடா உட்பட யாராலும் இதை உரிமை கோர முடியாது," என்று ராயர் கூறினார்.




