கோலாலம்பூர், நவ 12- சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஏதுவாக தேசிய பொது புகார் வலைத்தளமான rakan - e-Sepakat
வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்களின் புகார்களை பதிவு செய்யலாம் என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
இதன் மூலம் பெறப்படும் புகார்களை தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு கண்காணித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இதன் மூலம் மக்கள் மத்தியில் நிலவி வரும் ஒற்றுமை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
முன்னதாக, e-Sepakat வலைத்தளம் வாயிலாக சமூகத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் நிலைநாட்ட ஒருமைப்பாட்டு அமைச்சு எந்த வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது என பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் பின் சாட் எழுப்பிய கேள்விக்கு செனட்டர் சரஸ்வதி மக்களவையில் இவ்வாறு பதிலளித்தார்.
சமூகத்தில் ஏற்படவிருக்கும் ஒற்றுமை சார்ந்த பிரச்சினைகளை முன்னதாக தடுப்பது, இனம் மற்றும் மதம் சார்ந்த பிரச்சினைகள், பிற மதத்தை இழிவுப்படுத்துதல், அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகள், மக்கள் மத்தியில் பதற்ற நிலையை உருவாக்குதல் போன்ற செயல்களுக்கு எதிராக பொதுமக்கள் இந்த வலைத்தளத்தில் புகார் அளிக்கலாம்.
நாட்டு மக்களிடையே அமைதி நிலவவும், ஒற்றுமையை மேம்படுத்தவும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு எல்லா வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.




