புத்ராஜெயா, நவ 12- கூட்டரசு அரசியலமைப்பில் கூறப்பட்டது போல் சபா மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய 40 விழுக்காடு வருமானம் தொடர்பாக கோத்தா கினாபாலு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக அரசாங்கம் மேல்முறையீடு செய்யாதது குறித்து நாளை நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்படும்.
இந்த தகவலைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நாளை தெளிவாக விளக்கம் வழங்கப்படும் என்று நிதியமைச்சருமான டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.
இந்நிலையில், சபாவிற்கு 40 விழுக்காடு வருமானம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்படும் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யவில்லை என சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டதாக அவர் தெளிவுப்படுத்தினார்.
கூட்டரசு அரசாங்கத்தின் இந்த முடிவைத் தொடர்ந்து உடனடியாக மாநில அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தேசிய சட்டத்துறை அலுவலகம் AGC ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்திருந்தது.
கடந்த 17ஆம் தேதி அக்டோபர் மாதம், சபா மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய 40 விழுக்காடு வருமானத்தை கூட்டரசு அரசாங்கம் 50 ஆண்டுகளாக முறையாக வழங்காமல் அரசியல் சாசனத்தை ஏமாற்றியுள்ள்தாக கோத்தா கினாபாலு உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.




