பெட்டாலிங் ஜெயா, நவ 12- நாட்டின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் மீண்டும் அமைச்சரவையில் இணையப்போவதாக வெளிவந்திருக்கும் ஆருடங்களைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்தார்.
கைரி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரதமர், "ஓ அப்படியா ? யார் உங்களுக்குச் சொன்னது" என்று செய்தியாளர்களிடம் அன்வார் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக கைரி ஜமாலுடின் இயற்கை வள, பருவநிலை மாற்று அமைச்சர் பொறுப்பு வகிக்கவிருப்பதாக பிரபல மலாய் செய்தி தளம் ஒன்று செய்தியை வெளியிட்ட நிலையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்து டிசம்பர் மாதம் தொடக்கத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பில் உள்ள மடாணி அரசாங்கத்தில் இதுவரை மூன்று அமைச்சர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் ரஃபிசி ரம்லி, இவோன் பெனெடிக், மற்றும் நிக் நஸ்மி ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.




