ஈப்போ, நவ 12: வடக்கு நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று அதன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததால் தீப்பிடித்தது. லாரி ஓட்டுநர் தீயில் கருகி உயிரிழந்தார். இந்த விபத்து இன்று அதிகாலை வட-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் (PLUS) கிலோமீட்டர் 254 பகுதியில் ஏற்பட்டது.
கோலா கங்சார் மற்றும் மேரு ராயா தீயணைப்பு நிலையங்களிலிருந்து ஒரு குழு, காலை 3.19 மணிக்கு அவசர அழைப்பு வந்தவுடன் சம்பவ இடத்துக்கு புறப்பட்டதாக பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) செயல்பாட்டு பிரிவின் இடைக்கால உதவி இயக்குநர் ஷஸ்லீன் முகமது ஹனாபியா கூறினார்.
“64 வயதான ஓட்டுநர், தீயில் முழுவதுமாக கருகிய நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கோலா காங்க்சார் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் விசாரணை அதிகாரி உறுதிப்படுத்தினார்,” என்று அவர் கூறினார்.
உயிரிழந்தவரின் உடல் காவல்துறையிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது. மீட்பு நடவடிக்கை காலை 5.07 மணிக்கு நிறைவடைந்தது.




