டெல்லியின் செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு: பிரதமர் அன்வார் இரங்கல்
கோலாலம்பூர், நவம்பர் 11 -
டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பல உயிர்கள் பலியாகி, மற்றவர்கள் காயமடைந்ததையடுத்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.
அவர் இன்று தனது ஃபேஸ்புக் பதிவில், "இந்த மனிதாபிமானமற்ற சோகத்தால் துயரத்தில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது பயங்கரவாதச் செயலாக உறுதிப்படுத்தப்பட்டால், அது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். அப்பாவிச் சமூகத்திற்கு எதிரான எந்தவிதமான வன்முறைகளுக்கும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கும் எந்தவித நியாயமும் இல்லை," என்று கூறினார்.
மேலும், இந்த குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறியவும், பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும் உழைக்கும் மீட்புக் குழுவினருக்கும் அதிகாரிகளுக்கும் அன்வார் நன்றி தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களின் பிரார்த்தனைகளும் நினைவுகளும் உள்ளன," என்றும் அவர் கூறினார். காரில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






