ஷா ஆலாம், நவ 11: அரசு மருத்துவமனைகளில் பணியாளர் பற்றாக்குறையை தீர்க்க வெளிநாடுகளிலிருந்து செவிலியர்களைப் பணியமர்த்தும் நடவடிக்கையை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு செவிலியர்கள் நாட்டில் பணியாற்ற அனுமதிக்கப்படும் முன் அவர்களின் திறன், மருத்துவ நிபுணத்துவம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல கடுமையான நிபந்தனைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மட் தெரிவித்தார்.
“வெளிநாட்டு செவிலியர்களை நாட்டில் பணியமர்த்தும் வாய்ப்பை பரிசீலிப்பதில் சுகாதார அமைச்சகம் எந்தத் தடையையும் வைப்பதில்லை.
“ஆனால் அவசியமான நிபந்தனைகள் என்பது அவர்களின் மருத்துவ திறன், சேவை தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவை உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதோடு, பண்பாட்டு மற்றும் மொழி பொருத்தமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்,” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தின் வாய்மொழி கேள்வி பதில் அமர்வில் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில் காலியிடங்களை நிரப்புவதற்காகக் குறிப்பாக இந்தோனேசியாவில் இருந்து செவிலியர்களை நியமிக்கும் அரசின் தயார்நிலையைப் பற்றி தெப்ராவைச் சேர்ந்த ஜிம்மி புவா வீ சே எழுப்பிய கூடுதல் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
இதுவரை எந்த மாநிலத்திலிருந்தும் இந்த விஷயத்துக்காக மலேசிய சுகாதார அமைச்சகம் எந்தவொரு அதிகாரப்பூர்வமான விண்ணப்பமும் பெறவில்லை என்றார்.




