கிள்ளான், நவ 11- மேற்கு கடற்கரை விரைவுச்சாலை (WCE) திட்டத்திற்காக கிள்ளானில் உள்ள கம்போங் ஜாவாவில் நிலத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்ட 19 நில உரிமையாளர்களுக்கான அனைத்து நடைமுறைகளும், குடியிருப்பாளர்களுடனான விவாதங்கள் மற்றும் சட்ட செயல்முறைகள் உட்பட, அனைத்துல் நிறைவடைந்துவிட்டதாக மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.
இழப்பீடு குறித்த அனைத்து நடைமுறைகளும், நீதிமன்ற மற்றும் நடுவர் மன்ற செயல்முறைகள் உட்பட, ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டதால், மேலும் பேச்சுவார்த்தைகள் எதுவும் இருக்காது என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தீர்க்கப்பட அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். நவம்பர் 24 ஆம் தேதி வரை பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு இடம் பெயர கூடுதல் கால அவகாசம் வழங்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"அவர்கள் நகர்வதற்கு கூடுதல் நாட்கள் கொடுத்துள்ளோம். இரண்டு வாரங்கள் போதுமானது," என்று அவர் கூறினார். இந்த விவகாரத்தை சிலர் இன ரீதியாகப் பார்க்க முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்த மந்திரி புசார், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பொது நலனுக்காகவே மேற்கொள்ளப்படுவதாகத் தெளிவுபடுத்தினார்.




