புதுடெல்லி, நவ 11- இந்திய நாட்டின் தலைநகரமான டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை (Red Fort) அருகே நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது எட்டுப் பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 20 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6:52 மணியளவில் சிகப்பு விளக்கில் மெதுவாகச் சென்ற ஒரு ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) கார் வெடித்துச் சிதறியதாகவும், அதில் மூன்று பேர் இருந்ததாகவும் காவல்துறை ஆணையர் சதீஷ் கோல்ச்சா தெரிவித்தார். வெடிவிபத்துக்கான காரணத்தை காவல்துறை விசாரித்து, "அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து" வருவதாக டெல்லி நகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் சஞ்சய் தியாகி கூறினார்.
இந்தச் சம்பவம், தில்லியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான செங்கோட்டைக்கு அருகிலுள்ள மெட்ரோ நிலையம் அருகே நடந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பை மற்றும் தில்லியுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) குழுக்கள் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.
சம்பவ இடத்தில் உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS), தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆகியோரின் கடுமையான பாதுகாப்பு நிலவுவதாகவும், விசாரணை தொடர்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


