கோலாலம்பூர், நவ 11- ஃபங்-வோங் (Fung-Wong) சூறாவளி குறித்து மெட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிலிப்பைன்ஸின் விகான் நகரத்திலிருந்து சுமார் 129 கிலோமீட்டர் தென்மேற்கே இந்தச் சூறாவளி கண்டறியப்பட்டது. மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு நோக்கி நகரும் இந்தச் சூறாவளியின் அதிகபட்ச காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ ஆகப் பதிவாகியுள்ளது.
இந்தச் சூழ்நிலை காரணமாக, தென் சீனக் கடலின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், மலேசியாவின் பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேசங்கள், நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் இடி, மின்னல், பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கெடாவில் லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், போக்கோ சேனா, யான், பெண்டாங், கோலா மூடா, கூலிம் மற்றும் பண்டார் பாரு ஆகிய பகுதிகளும், பேராக் மாநிலத்தில் கிரியான், லாரூட், மாத்தாங், செலமா, மாஞ்சோங், பேராக் தெங்கா, பாகான் டத்தோ மற்றும் ஹிலிர் பேராக் ஆகிய பகுதிகளும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சிலாங்கூரில் சபா பெர்ணம், உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய பகுதிகளுக்கும், நெகிரி செம்பிலானில் ஜெலுபு மற்றும் சிரம்பான் மாவட்டங்களுக்கும், ஜோகூரில் மூவார், பத்து பஹாட், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளுக்கும் இந்த வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது






