ஷா ஆலாம், நவ 11 — அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சிலாங்கூர் ஜெலாஜா ஜோப்கேர் கார்னிவலில், செயற்கை நுண்ணறிவு (AI), தொழில்நுட்ப மற்றும் தொழில்பயிற்சி (திவேட்) தொடர்பான வேலைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
இந்த திட்டம் வேலை தேடுபவர்களுக்கு உயர்ந்த சம்பளம் வழங்கும் வேலைகளைப் பெற உதவும் என்பதுடன், மாநிலத்தின் தொடர்புடைய தொழில்துறைகளை வலுப்படுத்தவும் துணைபுரியும் என மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
“அடுத்த ஆண்டு மக்களுக்கு உயர்ந்த சம்பள கொண்ட வேலைகளை வழங்கவுள்ளோம். இதை நிறைவேற்ற நல்ல நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என நம்புகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
“சிலாங்கூர் இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு அல்லது திவேட் துறைகளில் தரமான வேலைகளைப் பெற முடிந்தால், அவர்களுக்கு நல்ல வருமானம் உறுதி செய்யப்படும். இதற்காக சரியான நிறுவனங்களையும் தொழில்துறைகளையும் எங்கள் கார்னிவலில் இணைக்க முயற்சிக்கிறோம்,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
வேலை தேடுபவர்கள் இந்த கார்னிவலில் வழங்கப்படும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மனிதவள அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக வீ.பாப்பாராய்டு கூறினார்.
கடந்த ஏப்ரல் 19 அன்று தொடங்கப்பட்ட இவ்வாண்டுக்கான கார்னிவல், மாநிலத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்று, 40,000 வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் (OKU) மற்றும் முன்னாள் கைதிகளுக்கான வேலைகளும் அடங்கும் என்றார்.
இத்திட்டம் சிலாங்கூர் சமூக பாதுகாப்பு நிறுவனம் (Socso) உடன் இணைந்து நடத்தப்பட்டது. அதில் கட்டிடம், சந்தைப்படுத்தல், சுகாதாரம், சுற்றுலா, போக்குவரத்து, சேவை மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.




