ஷா ஆலம், நவ 10: மலேசியா புள்ளியியல் துறை (DOSM) 2025 செப்டம்பர் மாத வேலைவாய்ப்பு நிலைமை குறித்து அறிவித்தது. செப்டெம்பரில் மொத்த வேலை இல்லாதோர் எண்ணிக்கை 518,600ஆக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் மாதம் பதிவான 520,000 எண்ணிக்கையைவிட குறைவாகும்.
தொழிலாளர் சந்தையின் வளர்ச்சி நாட்டின் நல்ல பொருளாதார செயல்திறனை பிரதிபலிக்கிறது என மலேசியா புள்ளியியல் துறையின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் முகமட் ஊசிர் மஹிடின் கூறினார்.
செப்டம்பரில் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 17.54 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் இது 17.51 மில்லியன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது 0.2% வளர்ச்சியை கண்டுள்ளது.
வேலையில் உள்ளோர் (employed persons) எண்ணிக்கை செப்டம்பரில் 17.03 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் இது 16.99 மில்லியன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வேலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 0.2% அதிகரித்துள்ளது.
வேலை தேடும் விகிதம், அதாவது வேலைவாய்ப்பு பெறுவதற்காக செயல்படும் வேலை இல்லாதோரின் மொத்த விகிதம் 79.8% ஆகும். இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் இருந்த 414,900 பேரை விட செப்டம்பரில் 413,600 பேராகக் (0.3%) குறைந்துள்ளது.
மலேசியாவின் தொழிலாளர் சந்தை நிலை வளர்ச்சி அடைந்தது என்றும், வேலை வாய்ப்பில் உள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து, வேலை இல்லாதோர் குறைந்துள்ளதாகவும் தெரிகிறது.




