பெட்டாலிங் ஜெயா, நவ 10- ஏழு மரபுவழி காற்பந்து வீரர்கள் மலேசியக் காற்பந்து சங்கமான எஃப் ஏ எம்மிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக மலாய் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஏழு மரபுவழி காற்பந்து வீரர்களும் உலக காற்பந்து சம்மேளனமான ஃபிஃபாவினால் அபராதம், மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஏழு வீரர்களும் ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதற்கு, எஃப்ஏஎம் நிர்வாக ஊழியர்களின் ஆவணச் சமர்ப்பிப்பு செயல்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழையே காரணம் என்று கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் உள்ள வழக்கறிஞர்கள் ஏழு வீரர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், எஃப்ஏஎம்-ஐ எதிர்த்து வழக்குத் தொடர அவர்கள் பரிசீலித்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "அவர்கள் (ஏழு வீரர்கள்) அவ்வாறு செய்ய முடியும், மேலும் இது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் அல்ல, ஏனெனில் இடைநீக்கத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது," என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
இந்தச் சிக்கலால் சில வீரர்களின் ஒப்பந்தங்கள் கிளப்புகளால் உடனடியாக ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் இடைநீக்கக் காலம் முடிந்த பிறகு புதிய கிளப்புகளைத் தேடுவதற்கு உதவும் வகையில், தங்கள் பெயரில் உள்ள களங்கத்தை அகற்ற வீரர்கள் நம்புவதாகவும் அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.
கடந்த செப்டம்பர் மாதம், ஜூன் 10ஆம் தேதி வியட்நாமுக்கு எதிரான 2027 ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னதாக, வீரர்களின் தகுதியை உறுதிப்படுத்த எஃப்ஏஎம் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எஃப்ஏஎம் மற்றும் சம்பந்தப்பட்ட ஏழு மரபுவழி வீரர்கள் மீது ஃபிஃபா நடவடிக்கை எடுத்தது.




