கோலாலம்பூர், நவ 10- முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடினுக்கு எதிரான ஊழல், அதிகார துஷ்பிரயோகம் வழக்கு விசாரணை அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிபதி நூர் ருவேனா நுர்டின், துணை அரசு வழக்கறிஞர் வான் ஷாருடின் வான் லடின் மற்றும் தற்காப்பு வழக்கறிஞர் சேதன் ஜெத்வானி ஆகியோரின் ஒப்புதலுக்குப் பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை மொத்தம் 29 நாட்களுக்கு விசாரணை தேதிகளை நிர்ணயம் செய்தார்.
அதன்படி, மார்ச் 9 முதல் 11; ஏப்ரல் 13, 16, 28, 29; மே 25, 26; ஜூலை 6 முதல் 10, 13 முதல் 17, 27 முதல் 29; மற்றும் ஆகஸ்ட் 17 முதல் 21, 26, 27 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெறும். மேலும், நவம்பர் 27 அன்று வழக்கு நிர்வாகத்திற்கான தேதியாகவும், நவம்பர் 18 அன்று முஹிடின் யாசின் தனது கடப்பிதழைத் தற்காலிகமாக விடுவிப்பது தொடர்பான மனு மீதான விசாரணைக்கான தேதியாகவும் நீதிமன்றம் நிர்ணயம் செய்துள்ளது.
அரசு தரப்பில் சுமார் 30 சாட்சிகள் அழைக்கப்படுவார்கள் என்று வான் ஷாருடின் தெரிவித்தார். 78 வயதான பெர்சத்து கட்சித் தலைவரான முகிடின் யாசின், ஒரு தனிநபர் மற்றும் மூன்று நிறுவனங்களிடமிருந்து RM232.5 மில்லியன் லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நான்கு அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அம்ப் பேங்க் மற்றும் ஜாலான் ஸ்டேசன் சென்ட்ரலில் உள்ள சிஐஎம்பி பேங்க் ஆகிய இடங்களில் பிப்ரவரி 25, 2021 மற்றும் ஜூலை 8, 2022-க்கு இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இன்றைய வழக்கு விசாரணையில் முஹிடினுக்கு நீதிமன்றம் விலக்கு அளித்ததால் அவர் ஆஜராகவில்லை.




