கோலாலம்பூர், நவ 10- பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் அமைச்சரவை மாற்றம் நிகழலாம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் அந்த விவகாரம் தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது.
நாளை நடைபெறும் கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்கும் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இருப்பினும், இவோனின் இராஜினாமா மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் அவர்களி ன் செனட்டர் பதவிக்காலம் டிசம்பர் 2ஆம் தேதியுடன் முடிவடைவதால், அமைச்சரவை மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி மற்றும் இயற்கை வளங்கள் மற்றும் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோர் மே 28 அன்று இராஜினாமா செய்ததிலிருந்து இரண்டு இடங்கள் காலியாகவே உள்ளன.
அவர்களது பொறுப்புகளை தற்போது இரண்டாம் நிதி அமைச்சர் அமீர் ஹம்ஸா அஸிஸான் மற்றும் தோட்ட மற்றும் பொருட்கள் துறை அமைச்சர் ஜோஹாரி கானி ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சபாவை மேம்படுத்துவதிலும் அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் கூட்டரசு அரசாங்கம் நிலையான கவனம் செலுத்தி வருவதாக அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.




