ஈப்போ, நவ 10: இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கும், மறுசீரமைப்பு பணிகளுக்கும் அரசாங்கம் 30 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் தொடர்பாக துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ஒரு விளக்ககூட்டத்தை வழிநடத்தியதாக கிளேபாங் தமிழ்ப்பள்ளியின் பள்ளி மேலாளர் வாரியத்தலைவர் மு.கிருஷ்ணசாமி கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பாக தேசிய கல்வி அறவாரியம் ( Yayasan Didik Negara) உருவாகப்பட்டது. இந்த அறவாரியத்தின் வாயிலாக இந்நாட்டின் தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானப் பிரச்சினைகள் மற்றும் மேம்பாடு குறித்து கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவு எடுக்க வழிவகை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் படிப்பதால் வகுப்பறை பற்றாக்குறை பிரச்சினை நிலவி வருகிறது. இதனை முன்னிட்டு இணைக்கட்டடம் நிர்மாணிக்க 2019 ல் திட்டங்கள் மற்றும் கட்டட வரைப்படங்கள் கல்வி அமைச்சிடம் சமர்பிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
அதன் பொருட்டு தேசிய கல்வி அறவாரியத்தின் மேலாளர் முகமட் ராடி மற்றும் அவரது குழுவினர் கிளேபாங் தமிழ்ப்பள்ளிக்கு கடந்த 6.11.2025 ல் வருகை மேற்கொண்டனர். அவர்கள் வருகையளித்து 20 நிமிடத்திற்குள் மலேசிய கல்வி அமைச்சர் பட்லினா சீடேக் திடீர் வருகை மேற்கொண்டார். அவரின் இவ்வருகை பள்ளி நிர்வாகத்திற்கும், அறவாரிய குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை என்று அவர் சொன்னார்.
கல்வி அமைச்சர் பள்ளி தலைமையாசிரியர் சி. விஜயன் மற்றும் பள்ளி வாரியத் தலைவர் மு.கிருஷ்ணசாமியுடன் பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, பல தகவல்களை கேட்டறிந்தார். பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை என்று அவர் கூறினார்.
அதன் பின் நடைபெற்ற கூட்டத்தில் வருகையாளர்களுக்கு இப்பள்ளியின் இணைக்கட்டடம் குறித்த தெளிவான விளக்கத்தை தாம் வழங்கியதாக பள்ளி மேலாளர் வாரியத்தலைவரான அவர் சொன்னார்.
இப்பள்ளிக்கான இணைக்கட்டட கோரிக்கை வைத்தாகி விட்டது. அறவாரியக்குழுவினர் கலந்தாலோசித்து நல்லதொரு முடிவை நமக்கு தெரிவிப்பார்கள் என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.




