கோலாலம்பூர், நவ 10- சபாவுக்கான 40% கூட்டரசு வருமானப் பங்கு தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கூட்டரசு வருமானத்தில் சபாவின் 40% உரிமையை ஏறக்குறைய ஐந்து தசாப்தங்களாக வழங்கத் தவறிய புத்ராஜெயாவின் செயல் சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இது தொடர்பாக நாளை அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று அன்வார் இப்ராஹிம் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தில் உள்ள முக்கியக் கட்சிகளில் ஒன்றான கபுகான் ராக்யாட் சபா (GRS) மற்றும் பல தரப்பினர், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யாமல், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்று புத்ராஜெயாவை வலியுறுத்தியுள்ளனர்.
சபாவின் 40% கூட்டரசு வருமானப் பங்கு குறித்த புதிய ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து இறுதி செய்ய, நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, புத்ராஜெயாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த GRS தயாராக இருப்பதாக அதன் தலைவர் மன்றம் தெரிவித்துள்ளது.
கோததா கினபாலு உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு எந்தவிதமான நிதிக் அபராதமும் விதிக்கவில்லை, மாறாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அரசியலமைப்புச் சீராய்வை மேற்கொள்ள மட்டுமே உத்தரவிட்டது என்றும் GRS கூறியுள்ளது.
இதற்கிடையில், இந்த 40% வருமானப் பங்கு விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து, உப்கோ கட்சியின் தலைவர் ஈவோன் பெனடிக் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.




