ஷா ஆலம், நவம்பர் 10- நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட “Op Noda” என்ற சிறப்பு சோதனையில் மொத்தம் 398 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சோதனை அனுமதி இல்லாமல் செயல்பட்டுவரும் பொழுதுபோக்கு மையங்களை குறிவைத்து நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் 118 பொழுதுபோக்கு மையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதில், 103 மையங்களுக்கு செல்லுபடியாகும் அனுமதி இல்லை என்பது கண்டறியப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை (JSJ) இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
“கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் மைய உரிமையாளர்கள், 3 பேர் மேலாளர்கள், 150 பேர் பணியாளர்கள், 112 பேர் வாடிக்கையாளர்கள் மற்றும் 128 பேர் வெளிநாட்டு பெண்கள் (GRO) ஆவர். மொத்தத்தில் 87 பேர் உள்ளூர் குடிமக்கள் மற்றும் 311 பேர் வெளிநாட்டு நாட்டு மக்கள் ஆவர். இவர்களின் வயது 19 முதல் 55 வயது வரை என்று அவர் கூறினார்.
மேலும் சோதனையின் போது பல்வேறு பொழுதுபோக்கு உபகரணங்கள் மற்றும் சட்டவிரோதமாகப் பெற்ற பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் D7 பிரிவு தலைமையில், ஒவ்வொரு மாநில குற்றப்புலனாய்வு துறைகள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு, நாட்டில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு மையங்களும் சட்டபூர்வமான உரிமம் மற்றும் பதிவு விதிமுறைகளுக்கு அமைவாக இயங்குவதை உறுதி செய்வோம் என தெரிவித்தார். இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழிக்க பொதுமக்கள் தங்களிடம் உள்ள தகவல்களை அதிகாரிகளிடம் பகிர்ந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.




