ஷா ஆலம், நவம்பர் 8 — பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில், பெட்டாலிங் ஜெயா மாநகரசபை (MBPJ) தனது குழந்தை நட்பு பஸ் நிறுத்த திட்டத்தை இந்த ஆண்டு மேலும் மூன்று பள்ளிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.இன்று வெளியிட்ட பேஸ்புக் அறிக்கையில், இந்த திட்டம் SMK (P) ஸ்ரீ ஆமன், SMK (L) புக்கிட் பிந்தாங், மற்றும் SK பெட்டாலிங் ஜெயா ஆகிய பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுவதாக MBPJ தெரிவித்தது.
இவ்விரிவாக்கம், ஜூன் 20, 2024 அன்று சிலாங்கூர் ராஜா மூடா தெங்குக் அமீர் ஷா திறந்து வைத்த SMK அசுந்தா-வில் வெற்றிகரமாகச் செயல்பட்ட முன்மாதிரி திட்டத்தின் தொடர்ச்சியாகும்.மாணவர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தும் குழந்தை நட்பு நகரமாக பெட்டாலிங் ஜெயாவை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாதுகாப்பான மற்றும் அனைவர் பயன் பாட்டிற்கும் ஏற்ற பொதுப் போக்குவரத்து சூழலை உருவாக்குவதில் MBPJ தனது அர்ப்பணிப்பைத் தொடர்வதாகவும் அறிவித்தது.
சமீபத்தில், பஸ் நிறுத்த வடிவமைப்பு மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மேம்படுவதற்கான 23 மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்ட உரையாடல் அமர்வு நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்பு, வசதி மற்றும் அணுகல் வசதிகள் தொடர்பான முக்கிய கருத்துகள் பகிரப்பட்டன.
“ஒருங்கிணைந்த மாநகரத்தை உருவாக்கும் செயல் முறையில், குழந்தைகளின் குரலும் கருத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை இந்த முயற்சி நிரூபிக்கிறது,” என MBPJ தெரிவித்தது.




