ஷா ஆலாம், நவ 8- 2025ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில அரசின் பள்ளிப் பேருந்து கட்டண உதவித் திட்டம் உதவித் தேவைப்படும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பயனாக அமையும் என்று சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் கூறினார்.
இந்த திட்டமானது கடந்த காலங்களில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த மாண்புமிகு கணபதிராவ் வீரமான் அறிமுகம் செய்து வைத்த திட்டமாகும். ஆக, தொடர்ந்து இந்த திட்டம் தொடரப்படும் என்று வீ. பாப்பாராய்டு கருத்துரைத்தார்.
சிலாங்கூர் மாநில அரசின் இந்த பரிவுமிக்க திட்டத்தினால் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்குடன் செயல்படுத்தப்படுகிறது, குறிப்பாக அவர்களின் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதற்கான போக்குவரத்துக் கட்டணத்தை ஈடுகட்டுவதில் உதவுகிறது. இந்த முயற்சி, கல்வியின் தொடர்ச்சியை உறுதி செய்வதுடன் மட்டுமல்லாமல், போக்குவரத்துச் செலவு காரணமாக ஏற்படும் பள்ளிக்கு வராமை மற்றும் இடைநிற்றல் போன்ற சிக்கல்களைச் சமாளிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
2025 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, இந்த மானியப் பங்களிப்பு, விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது, மேலும் இதன் விநியோகம் பள்ளிகள் மூலமாக மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த செயலாக்கத்திற்கு RM1,034,100.00 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இது சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள 98 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 3,447 மாணவர்களுக்குப் பயனளிக்கிறது.
சிலாங்கூர் மாநில அரசாங்கம், இந்திய சமுதாயம் உட்பட, மாநில மக்களின் கல்வி மேம்பாட்டில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மாநில அரசாங்கம் இந்திய சமுதாயம், குறிப்பாக B40 பிரிவினர், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நீரோட்டத்தில் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக குறிப்பிடத்தக்க தொகையை ஒதுக்குகிறது. இந்த நடவடிக்கை, சமமான, உள்ளடக்கிய கல்விக்கான அணுகுமுறையை உறுதி செய்வதில் மாநில அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.




