ஷா ஆலம், நவம்பர் 7 — 2025-ஆம் ஆண்டுக்கான “சிலாங்கூருக்கு வருகை தாருங்கள்” திட்டத்தின் போது சிலாங்கூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 13.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இது, மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கான விளம்பர முயற்சிகள் பலன் அளித்து வருவதை உறுதிப்படுத்துகிறது.
இவ்வருடம் ஜூன் மாதம் வரை மொத்தம் 4.14 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சிலாங்கூருக்கு வந்துள்ளனர். இது, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 3.64 மில்லியனை ஒப்பிடுகையில் உயர்ந்துள்ளது என்றார் சிலாங்கூர் மாநில உள்ளூராட்சி மற்றும் சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம்.
இதில் 72 சதவீதம் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும், 28 சதவீதம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆவர். ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை சிலாங்கூர் மாநிலம் சுற்றுலா துறையிலிருந்து RM11.4 பில்லியன் வருவாய் பெற்றுள்ளது என்றார்.
மேலும் சமூகம் சார்ந்த சுற்றுலா வழிகாட்டிகள் நியமனம் மூலம் ஆண்டுதோறும் 5,000 முதல் 10,000 சுற்றுலாப் பயணிகளை கோலா சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணாம் பகுதிகளுக்கு ஈர்க்க முடியும். இதேவேளை, சிலாங்கூர் அரசு 2026 ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் விகிதத்தை 35 சதவீதமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு வழங்கும் சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.




