ஷா ஆலம், நவம்பர் 7 — யூடியூப்பில் கஞ்சா வளர்ப்பு முறையை கற்றுக் கொண்ட காதல் ஜோடி, பங்சார் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் கஞ்சா மரம் வளர்த்ததாக கூறப்படும் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
40 மற்றும் 48 வயதுடைய இந்த ஜோடி நேற்று இரவு 11.30 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
போலீசார் 48 செ.மீ உயரமுள்ள இரண்டு கஞ்சா மரங்களையும், 27 கிராம் எடையுள்ள உலர்ந்த கஞ்சா பொருளையும் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு RM1,210 ஆகும்.
சந்தேகநபர் தனது காதலியுடன் சேர்ந்து அந்த வீட்டில் ஒன்றரை ஆண்டாக வாடகைக்கு குடியிருந்தனர். சுமார் ஏழு வாரங்களுக்கு முன்பு யூடியூப் வழியாக கற்றுக் கொண்டு கஞ்சா மரங்களை வளர்க்கத் தொடங்கியுள்ளார் என்று அவர் கூறினார்.
மேலும், போலீசார் இரண்டு கைப்பேசிகள், நான்கு சங்கிலிகள், ஒரு கால்சங்கிலி, ஒரு கையணிகலம், இரண்டு மோதிரங்கள் மற்றும் நான்கு லாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேகநபரின் மீது ஒரு போதைப்பொருள் குற்றச்சாட்டு பதிவாகியிருந்தது. மேலும் அவரது சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில், பெண் சந்தேகநபரின் பரிசோதனை முடிவு எதிர்மறையாக வந்துள்ளது. இந்த வழக்கு 1952ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் பிரிவு 6B மற்றும் பிரிவு 15(1)(a) கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூரினார்.




