ஷா ஆலாம், நவ 7 — மழைக்காலத்துக்கான தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கில், தாமான் புக்கிட் பெர்மாய் அருகே, முதியாரா கோர்ட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் அவசர எச்சரிக்கை அமைப்பு (early warning system) ஒன்றை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் நிறுவியுள்ளது.
இந்த அமைப்பு மழை அளவை கண்காணித்து, நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டால் பாதுகாப்பு அமைப்புகளுக்கு முன் எச்சரிக்கை வழங்கும் என எம்பிஏஜே பொறியியல் துறை இயக்குநர் ஜஃப்ருல் பாஸ்ரி முகமட் ஃபௌசி தெரிவித்தார்.
“இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக மழை பெய்யும் நேரங்களில், அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் குடியிருப்போரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் முன்னெச்சரிக்கை முயற்சியாகும்,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
சமீபத்திய ஆய்வில் மலை சரிவுப் பகுதியில் காட்டுச்செடிகள் வளர்ந்துள்ளன என்பதும் கண்டறியப்பட்டது, இதற்காக வைர் நெட்டிங் பொருத்தும் பணி ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் மாதத்தில் பிளாக் 3 மற்றும் செப்டம்பர் மாதத்தில் பிளாக் 1, 2 பகுதிகளில் பரிசோதனை மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
“முதியாரா கோர்ட் முழு பகுதியையும் மீளாய்வு செய்யும் திட்டத்தை எம்பிஏஜே முன்னெடுக்க உள்ளது. இது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாகும்,” என்று அவர் கூறினார்.
அவர் குடியிருப்பாளர்களுக்கு, மழைக்காலங்களில் சுற்றுப்புற நிலையை கவனமாகக் கண்காணிக்க அறிவுறுத்தினார்.




