கோலாலம்பூர், நவ 7 — கடந்த 2005 முதல் இதுவரை சுமார் 84,500 நோயாளிகள் மருத்துவ உதவித்தொகை (TBP) மூலம் பலனடைந்துள்ளனர். அதற்கு செலவு செய்யப்பட்ட உதவித்தொகை மொத்தம் RM793.7 மில்லியன் ஆகும்.
இத்திட்டத்திற்கு கடந்த மாதம் வரை 3,800க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற விண்ணப்பங்கள் உள்ளன. அதன் மொத்த மதிப்பு RM56.2 மில்லியன் ஆகும் என நிதி அமைச்சர் II டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஜா அசிசான் தெரிவித்தார்.
“இந்த நிதி, குறைவான வருமானம் உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சை, மருத்துவ உபகரணங்கள், மறுவாழ்வு சாதனங்கள் மற்றும் மருந்துகளின் செலவினை பகுதி அல்லது முழுமையாக ஏற்க உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு சில நிபந்தனைகள் பொருந்தும்,” என்றும் அவர் கூறினார்.
“இந்த நிதியில் இதயவியல், எலும்பியல், மூச்சுக் குறைபாடு, அறுவை சிகிச்சை, மறுவாழ்வு போன்ற மருத்துவ துறைகள்அடங்கும்,” என்று அவர் 2026 நிதி மசோதா விவாதத்தில் தெரிவித்தார்.




