கோலாலம்பூர், நவ 7- இந்திய சமூகத்திற்கான முன்முயற்சிகளைச் செயல்படுத்தும் குழுவின் நான்காவது கூட்டம் 2025 நேற்று முன்தினம் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது.
இந்திய சமூகத்திற்கான மாற்றப் பிரிவு (MITRA), பிரதமர் துறையின் (JPM) கீழ் இந்திய சமூகத்திற்கான பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதை ஒருங்கிணைக்கும் நோக்கில் இக்கூட்டம் நடத்தப்பட்டது. இத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட RM100 மில்லியன் நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று இக்கூட்டத்தின் தலைவர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்ட முன்முயற்சிகள், அவற்றின் அமலாக்கச் செயல்முறைகள் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
- தனியார் மழலையர் பள்ளி கல்வி உதவித் தொகை 'அனக் பிந்தார், நெகாரா ஜெமிலாங்';
- டயாலிசிஸ் உதவித் தொகை திட்டம்; இந்தியக் கிராமங்களின் உள்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடு;
- தமிழ்ப் பள்ளிகளில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப (ICT) ஆய்வக உபகரணங்களை மேம்படுத்துதல்;
- தர்ம மாடாணி திட்டம் (இந்து வழிபாட்டுத் தலங்களைச் சமூக மையங்களாக மேம்படுத்துதல்);
- பி40 பிரிவைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளைப் பழுதுபார்த்தல்;
-கல்வி மாடாணி திட்டம் (இந்திய ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவி);
- தமிழ்ப் பள்ளிகளில் உபகரணங்கள் மற்றும் தளபாடங்களை மேம்படுத்துதல்;
- உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஆரம்ப உதவி 5.0; இந்திய மாணவர்களுக்கான சாதன உதவி (Peranti) மற்றும் கடுமையான வறுமை ஒழிப்புத் திட்டம் ஆகியவை அடங்கும்.
அமலாக்கத்தை விரைவுபடுத்தும் நோக்கில், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் பரிமாறப்பட்டன.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடாணி அரசாங்கம், இந்திய சமூகத்திற்கான ஒவ்வொரு முயற்சியும் வெளிப்படையாகவும், திறம்படவும் செயல்படுத்தப்பட்டு, இலக்கு குழுவினருக்கு உண்மையான தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது என்று இக்கூட்டத்தின் தலைவர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மீண்டும் வலியுறுத்தினார்




