உலு லாங்கட், நவ 6 – தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வி பயிற்சி (திவேட்) இனி இரண்டாம் நிலை கல்வி துறையாக கருதப்படாமல், நவீன தொழில் துறையின் தேவைகளுக்கு ஏற்ப உயர் திறனுடைய பணியாளர்களை உருவாக்கும் முக்கிய தளமாக மாறியுள்ளது.
திவேட் தற்போது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நிலைத்த வளர்ச்சியை உருவாக்கவும், திறமையான மனித மூலதனத்தை மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது என சிலாங்கூர் ராஜா மூடா அறக்கட்டளை (YRMS) தலைமை நிர்வாக அதிகாரி முகமட் சியாஸ்வான் முகமட் டவுட் தெரிவித்தார்.
YRMS அமைப்பின் திவேட் 2025 நிகழ்ச்சியின் மூலம் 217 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, தங்கள் எதிர்கால கல்வி மற்றும் தொழில் துறையின் திசையைத் தீர்மானிக்க உதவும் சுய ஆராய்ச்சி பட்டறையில் கலந்து கொண்டனர்.
“திவேட் போட்டியில் காட்சிப்படுத்தப்பட்ட புதுமைகள் மாணவர்களின் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்துகின்றன. இது பெற்றோர்களுக்குப் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி, திவேட் துறையின் உண்மையான மதிப்பை உணரச் செய்கிறது,” என்றார்.
இதற்கிடையில், இத்தகைய நிகழ்ச்சிகள் திவேட் மாணவர்களை தொழில்சந்தையின் தேவைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இணங்க வைக்கும் முக்கிய தளமாகும். “இது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு மாணவர்களின் தன்னம்பிக்கையையும் மேம்படுத்துகிறது,” என்று IKTBN டுசுன் துவா இயக்குநர் சம்சூரி அரிப் கூறினார்.




