ஷா ஆலம், நவ 7 – சிலாங்கூர் உயர்கல்வி உதவித்தொகையை (HPIPT) உயர்த்த வேண்டும் என்று ஶ்ரீ செர்டாங் மாநில சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் சலிமி அஸ்மி பரிந்துரைத்தார்.
இது மாணவர்களின் வாழ்க்கைச் செலவையும் தொடக்கப் படிப்பு செலவையும் குறைக்க உதவும் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது வழங்கப்படும் RM1,000 உதவித்தொகை மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை என்பதால், அதனை RM1,500ஆக உயர்த்துவது பொருத்தமானது. இது பல்கலைக்கழகத்தில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், HPIPT பெறுநர்களுக்கு மடிக்கணினி வழங்குதலையும் அவர் பரிந்துரைத்தார். “மாணவர்கள் அவர்களின் படிப்பைத் தொடங்கும் போது தொழில்நுட்ப வசதி மிக முக்கியமானது,” என்றார்.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நிலைத்த வளர்ச்சியையும் முன்னெடுக்க மின்சார வாகனங்கள் (EV) பயன்பாட்டை விரிவுபடுத்த வேண்டும் என்றார் அப்பாஸ் சலிமி. இதனை அரசின் உத்தியோகபூர்வ வாகனங்களாகவும் பயன்படுத்துவதன் மூலம் பசுமை வளர்ச்சிக்கு பங்காற்றலாம் என அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் 2026 பட்ஜெட் எதிர்வரும் நவம்பர் 14 அன்று மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது




