ஷா ஆலம், நவ 6: கெடா, கூலிமில் உள்ள தாமான் பேராக் பகுதியில் தாயால் காயப்படுத்த முயற்சிக்கப்பட்ட ஏழு வயது சிறுவன் இன்னும் மன அழுத்தத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இரவு 11.05 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், சிறுவன் கட்டப்பட்டிருந்த துணி அவிழ்ந்ததால் உயிர் தப்பினார். ஆனால், அச்சிறுவனின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். நான்கு வயது தங்கை படுக்கையில் இறந்த நிலையில் காணப்பட்டார்; அச்சிறுமி தனது தாயால் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சமூக நலத்துறை (JKM) சிறுவனின் உறவினர்களை கண்டறிந்துள்ளது. அச்சிறுவனை பாதுகாக்க தந்தை தயாராக உள்ளதாகவும் கெடா மாநில நலத்துறை, பெண்கள், குடும்பம், சமூக மற்றும் ஒற்றுமை விவகாரங்களுக்கான குழு தலைவர் டத்தோ ஹலிமத்தோன் ஷாடியா சாட் கூறினார்.
சிறுவன் தற்போது கூலிம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையை விட்டு வெளியேறிய பின், சமூக நலத்துறை குழு சிறுவனின் தந்தையின் வீட்டில் கண்காணிப்பை மேற்கொள்ளும்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கொலைக்கான குற்றவியல் சட்டப் பிரிவு 302 மற்றும் கொலை முயற்சிக்கான பிரிவு 307 இன் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.




