ஷா ஆலம், நவ 6: பொதுமக்களின் வாகன நிறுத்துமிடங்களைத் தடுக்கும் வகையில் நாற்காலி மற்றும் மேசைகளை வைத்துள்ளதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் கோலா லங்காட் நகராண்மை கழகம் (எம்பிகேஎல்) தாமான் லங்காட் மூர்னி மற்றும் தாமான் லங்காட் உத்தமா பகுதிகளில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கை, வணிகர்கள் சிலர் தங்களின் வணிகப் பொருட்களான மேசை மற்றும் நாற்காலி போன்றவற்றை வைக்க வாகன நிறுத்துமிடங்களை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டது.
ஆறு வணிக வளாகங்களில் செய்யப்பட்ட சோதனையில், நான்கு வளாகங்களில் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், உரிமையாளர்களுக்கு மொத்தம் 20 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
“இத்தகைய அமலாக்க நடவடிக்கை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கான வசதிகளைத் தடைசெய்யும் வகையில் நாற்காலி, மேசை அல்லது பிற பொருட்களை வைப்பதைத் தடை செய்யும் 1974ஆம் ஆண்டின் சாலைகள், கால்வாய்கள் மற்றும் கட்டிடங்கள் சட்டம் (Akta 133) பிரிவு 46(1)(d) இன் கீழ் மேற்கொள்ளப்படுகிறது,” என்று எம்பிகேஎல் தனது அறிக்கையில் தெரிவித்தது.
மேலும், அதே சட்டப் பிரிவு 46(3)(a) இன் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து சீராக நடைபெறவும், சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படுவதற்காக தடையாக இருக்கும் பொருட்களை பறிமுதல் செய்யலாம்.
“பொதுமக்களின் வசதிகளைத் தடைசெய்யும் நடவடிக்கைகளை எம்பிகேஎல் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொள்கிறது. ஏனெனில், இது பொதுமக்களுக்கு இடையூறாகும்,” என்று எம்பிகேஎல் கூறியது.
இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், வணிகர்கள் சட்டத்தைப் பின்பற்றி, அனைவருக்கும் பொதுவாக வழங்கப்பட்டுள்ள வசதிகளை தனிப்பட்ட நலனுக்காக தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் எம்பிகேஎல் அறிவுறுத்தியுள்ளது.




