ஷா ஆலாம், நவம்பர் 6 — பான் கானல் (Ban Canal)’25 கார்னிவல் என்பது பொழுதுபோக்கு அல்லது சுற்றுலா நிகழ்ச்சியல்ல, மாறாக அது கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாக திகழ்கிறது என்று சிலாங்கூர் மந்திரி புசார் அல்லது எம்.பி ஐ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ சாய்போலியாசான் எம். யூசோப்தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து இந்த கார்னிவல், சபாக் பெர்ணம் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிறு வியாபாரிகள், ஹோம்ஸ்டே (Homestay) தொழிலாளர்கள் மற்றும் வேளாண் தொழில் முனைவோருக்கு நேரடியான நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
“இந்த கார்னிவலின் பொருளாதார தாக்கம் உடனடியாக தெரியாமல் இருக்கலாம், ஆனால் அதன் நன்மைகள் வருடந்தோறும் பரவி வருகிறது,” என்று அவர் மீடியா சிலாங்கூர் நடத்திய ‘Bicara Semasa’ நிகழ்ச்சிக்குப் பிறகு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, பான் கானல் கார்னிவல் மூலம் பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளூர் தயாரிப்புகள் மீண்டும் பரந்த சந்தைகளில் அறிமுகமாகின்றன.“முன்பு தேங்காய் பால் அரிசி கேக் என்ற பாரம்பரிய உணவு பற்றி பலருக்கு தெரியாது. ஆனால் பான் கானல் கார்னிவலில் அது அறிமுகமான பின், இன்று அது அனைத்து இடங்களிளும் பரவியுள்ளது.
800 விருந்தினர்களை தங்க வைக்கும் திறனுடன் 144 பதிவு செய்யப்பட்ட ஹோம்ஸ்டேக்கள், கார்னிவல் நடைபெறும் ஒவ்வொரு தடவையும் முழுமையாக முன்பதிவு செய்யப்படுகின்றன. இது உள்ளூர் பொருளாதார வளத்தை வெளிப்படுத்துகிறது.
மூன்று நாள் நிகழ்வாக நடைபெறும் பான் கானல் (Ban Canal)’25 கார்னிவல் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சபாக் பெர்ணம், சிம்பாங் லீமா, பாரிட் 14-ல் நடைபெறவுள்ளது. 20,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




