ஷா ஆலம், நவ 6 — எதிர்வரவிருக்கும் சிலாங்கூர் பட்ஜெட் 2026இல் தன்னுடைய தொகுதியில் உள்ள வெள்ளத் தணிப்பு திட்டம் (RTB) விரைவாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அரசு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று டுசுன் துவா மாநில சட்டமன்ற உறுப்பினர் டத்தோ வீரா ஜோஹான் அப்துல் அசிஸ் கேட்டு கொண்டார்.
பன்சுன், சுங்கை லூயி மற்றும் சுங்கை செரிங் பத்து 10 ஆகியவற்றை உள்ளடக்கிய சுங்கை லங்காட் ஆற்றுப் பகுதி ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால், வெள்ளத் தணிப்பு திட்டம் அந்தப் பகுதி மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
“தற்போது இத்திட்டம் இன்னும் முகமை மதிப்பாய்வு நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இதன் செய்லபாட்டை காண நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர்.
“அதே நேரத்தில், வடிகால் அமைப்பை மேம்படுத்த மாநில அரசு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஏனெனில், இது வெள்ள அபாயத்தை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
வெள்ளப் பிரச்சனை தவிர, ஜோஹான் தன்னுடைய தொகுதியில் உள்ள சுற்றுலா தளங்களில் இணைய அணுகலை மேம்படுத்தவும் மாநில அரசை கேட்டுக்கொண்டார்.
“சுங்கை லூயி, பன்சுன் மற்றும் சுங்கை செமுங்கிஸ் பகுதிகளில் இணைய அணுகல் இன்னும் பலவீனமாக உள்ளது.
“மக்கள் தொகை அதிகமாக இருப்பதையும், பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தேவையையும் கருத்தில் கொண்டு, 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய கிராமங்களில் சாலை இணைப்புகளை மேம்படுத்த அரசுக்கும் பரிந்துரை செய்யப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் பட்ஜெட் 2026 நவம்பர் 14ஆம் தேதி சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.




